கரூரில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி- ஒருதலையாக காதலித்த இளைஞர் உட்பட 5 பேர் கைது

கரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியை கடத்திய வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈசனத்தம் அம்மா பட்டியை சேர்ந்த மாணவி ஒருவர் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினசரி தனியார் பேரூந்து மூலம் கல்லூரிக்கு சென்று வருகிறார். வழக்கம் போல நேற்று 10-ம் தேதி மதியம் தாந்தோன்றிமலை, பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சக மாணவிகளுடன் இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மாணவியின் ஊரைச் சேர்ந்த நந்தகோபால், (25) என்பவர் 3 நபர்களுடன் வந்து மாருதி ஆம்னி காரில் கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவியின் சகோதரி பெரியநாயகி என்பவர் அளித்த புகாரின் பேரில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கரூர் நகரம் மற்றும் கரூர் ஊரக உட்கோட்டம், பசுபதிபாளையம் காவல் வட்ட ஆய்வாளர் மற்றும் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV கேமரா பதிவு, அலைபேசி எண்களை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, கோடங்கிபட்டியில் நந்தகோபாலின் பாட்டி பொன்னம்மாள் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நந்தகோபால் மற்றும் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். பின்னர் கடத்தப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் நந்தகோபால் என்பவர் கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக பட்சமாக காதலித்து வந்துள்ளதும், ஆகையால் கல்லூரிக்கு சென்றபோது தன்னை திட்டமிட்டு கடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, 1. நந்தகோபால், 2. கலா (நந்தகோபால்-அம்மா), 3.கருப்பசாமி (நந்தகோபால்-நண்பர் (மாருதி ஆம்னி ஓட்டுநர்), 4. பழனிச்சாமி (நந்தகோபால்-நண்பர்) மற்றும் 5.சரவணன் (நந்தகோபால்-நண்பர்) ஆகியோர்களை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி ஆம்னி காரும் மீட்கப்பட்டு அனைவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவி அவரது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.