புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி! காப்பாற்ற சென்ற பெரியப்பாவும் பலி

 
ச்

மதுரை வாடிப்பட்டி அருகே வல்லவன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் மற்றும் கோவில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே T.நாராயணபுரத்தில் கிராம கோவிலான வல்லவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதங்களில் இரண்டு நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த வாரம் காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கப்பட்டது. இந்த கோவிலில் பூசாரியாகவும் அரசு பேருந்து ஒட்டுநராகவும் ஆதிநாராயணன்(55) இருந்து வருகிறார். இன்று மதியம் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆதிநாராயணன் பூசாரி கோவில் பெட்டி சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் சாமி ஆடி ஊர்வலம் வந்து கோவிலில் வைத்து கிடா வெட்டி திருவிழாவானது நடைபெற இருந்தது. இன்று காலை ஆதிநாரயணனின் சகோதரர் கண்ணன் மகன் ஸ்ரீ கிருஷ்ணன்(20) தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணன் அவரது பெரியப்பா ஆதிநாரயணன் மற்றும் ஆதிநாரயணனின் தந்தை சின்ன தம்பி(79) ஆகிய மூவரும் தேட்டத்தில் கால்நடைகளுக்காக தீவனபுல் அறுத்து வருவதற்காக சென்றுள்ளனர். தீவனபுல் அறுத்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்வயர் அருந்து கல்லூரி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. இதனால் துடிதுடித்த ஸ்ரீ கிருஷ்ணாவை  பெரியப்பாவான ஆதிநாராயணன் மற்றும்  தாத்தா சின்னத்தம்பி இருவரும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியதால்  கோவில் பூசாரி ஆதிநாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார். கல்லூரி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தாத்தா சின்னதம்பி மிக ஆபத்தான நிலையில் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

இதன் தகவல் அறிந்த வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சோழந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் வந்து உயிரிழந்த இருவருக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு அரசிடம் பெற்று தருவதாக உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். T.நாராயணபுரம் கிராமத்தில்  வல்லவன் கோவில் மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில், பெட்டி தூக்கி வரக்கூடிய கோவில் பூசாரி ஆதிநாராயணன் மற்றும் அவருடைய தம்பி மகன் கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததால்  திருவிழா நிறுத்தப்பட்டு  அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.