பப்பில் நடனமாடி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில், பப்பில் நடனமாடி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல். இவர் சென்னையில் ஹாஸ்டலில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் முகமது சுகைல் நேற்றிரவு தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார். பப்பில் ஆடிக்கொண்டிருந்த போது, முகமது சுகைல் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை, அவரது நண்பர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முகமது சுகைலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கொரோனாவிற்கு பின் இளைஞர்கள், சிறுவயதினர் என பலருக்கு மாரடைப்பு வருகிறது. அதனால் திடீர் திடீரென உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. அந்த வகையில் முகமது சுகைலுக்கு நடனமாடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.