கல்லூரி மாணவி 3-வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை

 
suicide

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த  தனியார் மகளிர்  கல்லூரி  மாணவி 3-வது மாடியில் இருந்து கீழே  விழுந்து பலியானார். 

suicide

வந்தவாசி நகரில்  அண்ணாசாமி முதலியார்  தெருவை சேர்ந்தவர் குருசாமி, இவர் உக்கல் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி கொரக்கோட்டை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மகள்  அர்ச்சனா (20),  வந்தவாசி  திண்டிவனம்  சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த இவர், கல்லூரியில் உள்ள  3-வது மாடியில் இருந்து கீழே  விழுந்து உள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு சக மாணவிகள் கல்லூரி பேராசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி பலியானதாக தெரிவித்தார். பின்னர் வந்தவாசி போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பினர். பின்னர் தகவல் அறிந்த வந்தவாசி போலீசார்  அரசு மருத்துவ மனை  வளாகத்தில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவின்  உடலை பார்த்து  கதறி அழுதனர்.

இந்நிலையில் தனியார்  கல்லூரியை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு மருத்துவமனை முன்பாக திடீரென சாலை  மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார்  உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை  மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி  - மேல்மருவத்தூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கேயன் நேரில் வந்து தனியார் மகளிர் கல்லூரிக்கு சென்று விசாரணை செய்தார்.

பின்னர்  அரசு மருத்துவ மனையில் உடற்கூறு செய்த பின்பு மாணவியின் உடலை பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். உடலை பெற்று கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றனர்.