காதல் விவகாரம்- கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நமண சமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள சி-பிளாக் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். 18 வயதான இவர், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை வரலாறு படித்துவந்துள்ளார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த தற்போது கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே மூன்று ஆண்டு காலமாக காதலித்து வந்தததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்குள் சென்ற கோடீஸ்வரன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் வீட்டின் கதவை திறந்துள்ளனர். அப்பொழுது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நமணசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தூக்கில் தொங்கி சடலமாக இருந்த கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.