ஆட்சியரின் சர்ச்சை பேச்சு..! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

 
1

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். சிறுமி கூச்சலிட்ட நிலையில், சிறுமியின் கண்களில் கொடூராக கல்லால் தாக்கினான் அந்த சிறுவன். 

இந்நிலையில், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி இந்த சம்பவத்தில் அந்த சிறுமி மீதும் தவறு உள்ளது என்று பேசியது கடும் கண்டனத்துக்கு வழிவகுத்தது. அதாவது மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடந்தது. 

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மகாபாரதி, ''சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் அந்தக் குழந்தையே தவறாக நடந்துள்ளது; சம்பவத்தன்று காலை அந்த சிறுவனின் முகத்தில் குழந்தை துப்பியுள்ளது. அதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இருபக்கமும் நாம் விசாரிக்க வேண்டியுள்ளது. வருமுன் தடுப்பதே முக்கியம்; குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவை குறித்து பெற்றோரை நாம் Sensitize செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

ஒரு மாவட்ட ஆட்சியரே சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன. மயிலாடுதுறை ஆட்சியருக்கு கணடனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர்,  அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சர்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம் செய்யபப்ட்டுள்ளார். ஆட்சியர் மகாபாரதிக்கு வேறு எந்த பணியும் தமிழக அரசு ஒதுக்கவில்லை. இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.