மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை : யாரும் பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம் - கலெக்டர் எச்சரிக்கை..!

 
1

 திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்த வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் என்றும், இதனால் உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் என்றும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசுந்தரவல்லி தெரிவித்திருக்கிறார். 

இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடித்து, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வலிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த பிரச்சனைகளால் பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள டிப்ஸ்: 

கலெக்டர் சிவசுந்தரவல்லி, கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தனது செய்து குறிப்பில் பேசியிருக்கிறார். வெயிலில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க தண்ணீர் குடிக்க வேண்டும், சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும் மோர் அதிகமாக குடிக்க வேண்டும் என்றும் அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, ORS உப்புகரைசலை குடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

உடலில் இருந்து வியர்வை வெளியேறும் வகையில் மிருதுவான மற்றும் தளர்ந்த காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட குளிக்கலாம் என்றும் பரிந்துரை செய்கிறார். 

மாத்திரைகளை சாப்பிட கூடாது:

ஒரு பாக்கெட் ORS பொடியை, 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் கலந்து, அதனை 24 மணி நேரத்திற்கு குடித்து விட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். மயக்கம் மட்டும் உடல் சோர்வு அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும், நீங்களாக ஆஸ்பிரின், பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது என்றும்  கூறியிருந்தார். எதுவாக இருப்பும்‌‍, மருத்துவரின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், மக்கள் பகலில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், சிறுவர்கள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்குமாறும் அவர் கூறியிருக்கிறார். கூடவே, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதையும், மது குடிப்பதையும், புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். 

கோடை வெயிலினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க, அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். மக்கள், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த நெறிமுறைகளை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

வெயிலின் தாக்கத்தின் போது ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக்கொண்டால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று கலெக்டர் எச்சரித்திருக்கிறார். பாராசிட்டமால் மாத்திரையால் உண்டாகும்  பாதிப்பு!

பாரா மாத்திரை, பெரும்பாலான சமயங்களில் பாதுகாப்பானதாகத்தான் இருக்கும். ஆனால், அதன் பக்க விளைவாக சருமத்தில் ரேஷஸ் வருவது, குமட்டல், வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்படலாம். இந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிடும் பட்சத்தில், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவை ஏற்படலாம். 

அதே சமயத்தில், இந்த மாத்திரையை ஆல்கஹால் உடன் எடுத்துக்கொள்ளும் போது கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம் என்றும், மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

அதிக நாட்கள், அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரகம் செயலிழந்து போகலாம். ஒரு சில நேரத்தில் சரும அரிப்பு, முகம் வீங்குதல், நாக்கு வீங்குதல், தொண்டை வீங்குதல் உள்ளிட்டவையும் நிகழும். எனவே, மக்கள் இதை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் போது கவனம் செலுத்துவது நல்லதாகும்.

வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்?

மக்கள், வெயிலை சமாளிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம். அடிக்கடி மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும் போது, உப்பிற்கு பதிலாக எலெக்ட்ரோ டிரிங்க்ஸை எடுத்துக்கொள்லலாம். மது அருந்துவதைதவிர்க்கலாம். வெள்ளரிக்காய், பழங்கள், தர்பூசணி உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.