திருவண்ணாமலை கோயிலில் வசூல் வேட்டை- ஒருவருக்கு ரூ.1,000 எனக் கூறி ஏமாற்றிய நபர்
திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் அருகில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக கூறி அதிகாலையில் மர்மநபர் வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 வரை வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திராவை சேர்ந்த சூரிபாபு என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மணி என்பவர் தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக கூறி நபர் ஒருவருக்கு ரூ.1,000 வசூலித்து ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நேரடி சாமி தரிசனத்திற்கும் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆந்திர மாநில பக்தர்களை ஏமாற்ற முயன்ற நபர் தப்பியோடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தப்பியோடிய நபர் மீது வழக்கு பதியப்பட்டு சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

