சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர் மக்களை எப்படிப் பார்ப்பார்? - தவெக வேட்பாளரை துளைத்தெடுத்த இளம்பெண்கள்
சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர், மக்களை எப்படிப் பார்ப்பார் என்று கோவையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை இளம்பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் ஓட்டம் பிடித்தார்.

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.எம் சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வாரச்சந்தை என்பதால் கூட்டம் அலைமோதிய நிலையில், வேட்பாளர் பொதுமக்கள் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறினார். அதை ஆமோதித்த காய்கறி கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம் பெண்கள் வேட்பாளர் சுகுமாரிடம் சராமரி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர் மக்களை எப்படிப் பார்ப்பார்? – த.வெ.க வேட்பாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த இளம்பெண்கள்#vijay #tvk pic.twitter.com/7EVjlXSMz1
— Indian Express Tamil (@IeTamil) April 12, 2026
உங்கள் தலைவர் விஜய் அவரது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை, பேசுவதில்லை எனச் செய்திகள் வருகிறதே. தன் ரத்த உறவுகளையே பார்க்காத ஒருவர், எப்படி தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? என்றும், அதே போல் உங்கள் கட்சியில் இருக்கும் சிறு வயது உடையவர்கள் மற்ற கட்சிகளின் வயது மூத்த நிர்வாகிகளை அசிங்கமாக பேசுவதும், கேவலமாக பேசுவதும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற செயல்களை ஏன் உங்கள் தலைவர் விஜய் கண்டிக்கவில்லை, அவ்வாறு பேசுபவர்கள் மீது உங்கள் தலைவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினர்.அதிரடி கேள்விகளால் நிலைகுலைந்து போன, தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் என்.எம் சுகுமார் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தார். உடன் வந்த கட்சி நிர்வாகிகள் கேள்வி கேட்ட பெண்களை சமாதானம் செய்ய முயன்றும், ஆதாரத்தோடு பதில் சொல்லுங்கள் என அந்தப் பெண்கள் விடாப்பிடியாக நின்றனர். சுற்றுவட்டாரத்தில் இருந்த பொதுமக்களும் அங்கு கூடத் தொடங்கியதால், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வேட்பாளர், மேற்கொண்டு பேசத் துணிவில்லாமல் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றார். வாக்கு கேட்க வந்த இடத்தில் இளம் பெண்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவெக வேட்பாளர் தெறித்து ஓடியது பேசும் பொருளாகியுள்ளது. இதை சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



