கோவை மாணவி தற்கொலை வழக்கு- ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி
கோவையில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, கடந்த 2021-ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது அறையில் இருந்து கைப்பற்ற கடிதம் ஒன்றில், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்திருந்தார். சிறுமி முன்னால் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்தாகவும், இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மிதுன் மனைவி அர்ச்சனா ஆகியோரிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் மதுன் சக்கரவர்த்தியை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனையும் போலீசார் கைது செய்தனர். கடிதத்தின் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உறுதியான நிலையில், சிறுமிக்கு சிறு வயதில் பாலியல் தொல்லை அளித்த மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பள்ளி மாணவி மிதுன் சக்கரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தல் செய்யபட்டது தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சிறுமியும், அர்ச்சனாவும் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் சேகரித்திருந்தனர். கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆசிரியரின் மனைவியை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடதக்கது.


