கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- போலீசாரின் அதிரடி திட்டம்
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரையும் மாணவி முன் அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நவ.2 ஆம் தேதி இரவு காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 23 வயது கல்லூரி மாணவியை, மது போதையில் வந்த மூன்று பேர், நண்பரை அரிவாளால் வெட்டி விட்டு, மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே பதுங்கியிருந்த சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்புசாமி (30), குணா என்கிற தவசி (20), மற்றும் மதுரையை சேர்ந்த கார்த்தி என்கிற காளீஸ்வரன் (21) ஆகிய மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களை 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிக்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரையும் பாதிக்கப்பட்ட மாணவி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பீளமேடு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதி கிடைத்த பின் மாணவி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.

