கோவை சரவணம்பட்டி போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை..!

 

கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் பாலகுமார் (38). இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த பாலகுமாரின் மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு மாற்றப்பட்டார். அவர்களது 2 குழந்தைகளும் சேலத்தில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மனைவி குழந்தைகளை விட்டு விட்டு தனியாக லண்டனில் வேலைக்கு செல்வதில் பாலகுமாருக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. இதனால் பாலகுமார் அடிக்கடி தனது மனைவியை செல்போனில் அழைத்து இதுகுறித்து வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 19ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணியில் பாலகுமார் ஈடுபட்டிருந்தார். பின்னர் பணி முடிந்து மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்றார். பின்னர் 2 நாட்கள் வேலைக்கு செல்லவில்லை. பாலகுமாரின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நேற்று இரவில் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு பாலகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.