கோவை சிறார் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை சின்னவேடம்பட்டியில் துடியலூர் சாலையில் உள்ள ராமன் விகார் குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா உள்ளது. பூங்காவில் விளையாடுவதற்காக நேற்று மாலை பிரியா (வயது 8), ஜியான்ஸ் (வயது - 6) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இருவரும் சறுக்கு விளையாட்டு விளையாட முயன்றனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது.

இதனால் இரண்டு சிறுவர்களும் மயங்கி விழுந்ததைக் கண்டு அருகிலிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சரவணம்பட்டி காவல்நிலையத்தினர், விசாரணை நடத்தினர். விசாரணையில் பூங்காவில் உள்ள கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் அங்கிருந்த விளையாட்டு உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கோவை ராணுவ குடியிருப்புப் பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறார் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுவர் பூங்கா ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட முருகன், சீனிவாசன், எலக்ட்ரீசியன் சிவா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அஜாக்கிரதையால் உயிரிழப்பை ஏற்படுத்தும் சட்டப்பிரிவு 304(ஏ)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.


