என் குழந்தைக்கு ஏற்பட்டது அநியாயம் : கோவை அரசு மருத்துவமனை மீது பரபரப்பு புகார்..!

 
1

மக்கள் குறைதீர் முகாமில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் காடாம்பாடியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் மனுவை அளித்தார்.

அதில், "எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனது மகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், குழந்தைக்கு ரத்த அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, எங்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

மருத்துவர்களின் ஆலோசனைபடி, குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களிலேயே மீண்டும் குழந்தைக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்தன. இதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தோம். அப்போது பல ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எனக்கும், எனது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எச்ஐவி தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் கோவை அரசு மருத்துவமனையில் என் குழந்தைக்கு செலுத்தப்பட்ட ரத்தம் மூலமாகவே எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் பல ஆண்டுகளாக புகார் அளித்து வருகிறேன்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் நான் ஏற்கனவே தெரியப்படுத்தி இருக்கிறேன். நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள்.

கொடுமையான நோயுடன் எனது குழந்தை போராடிக் கொண்டிருக்கிறாள். என் மனைவிக்கும் உடல் நல பாதிப்பு இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, மாவட்ட நிர்வாகம் எனது மகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், எங்களுக்கு இலவச மனை அல்லது வீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.