கோவை கங்கா கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்..!!

 
1

கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான மதிப்பிற்குரிய ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழானது, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் கல்வி மேலாண்மையில் சிறந்து விளங்குதல் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் வழங்கும் விழா மார்ச் இன்று நடைபெற்றது. இதற்கு சென்னை, டியுவி எஸ்யுடி சவுத் ஆசியா நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புகள் பிரிவின் துணைத் தலைவர் எம். பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இந்நிறுவனத்தின் கோவை பொது மேலாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டார்.


இந்தச் சான்றிதழ் கங்கா மருத்துவமனையின் இயக்குனர் குழுவிடம் வழங்கப்பட்டது. கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவள்ளி சண்முகநாதன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசபாபதி, எலும்பியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர். எஸ். ராஜசேகரன், இயக்குனர்கள் திருமதி. நிர்மலா ராஜசபாபதி மற்றும் திருமதி. ரமா ராஜசேகரன், கங்கா நர்சிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஜெபகுமாரி சுதா ஆகியோர் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த கல்வியை வழங்குவதிலும், உலகளாவிய தரங்களைப் பின்பற்றுவதிலும் இந்தச் சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெறும் இரண்டாவது நர்சிங் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மண்டலத்தில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் நர்சிங் கல்வி நிறுவனம் இதுவாகும்.

கல்வியில் உயர் தரம், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சூழலை உருவாக்குதல், மற்றும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக கல்லூரி நடைமுறைகளைத் தொடர்ந்து மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.