கோவை தொகுதி நிலவரம் : ராஜ்குமார் பெயரில் 5 பேரும், ராமச்சந்திரன் பெயரில் 3 பேரும் போட்டி..!

 
1

வேட்பாளர் இறுதி பட்டியலின்படி கோவை பாராளுமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களை குழப்பும் வகையில், ராஜ்குமார் என்ற பெயரில், சுயேட்சையாக கோ.ராஜ்குமார் லேப்டாப் சின்னத்திலும், கோ.பா.ராஜ்குமார் கேக் சின்னத்திலும், எம்.ராஜ்குமார் வைரம் சின்னத்திலும் என 4 பேர் திமுக வேட்பாளரின் பெயரில் போட்டியிடுகின்றனர். 

அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பெயரில், சுயேட்சையாக எம்.ராமச்சந்திரன் மின்கம்பத்திலும், இரா.ராமச்சந்திரன் கேரம் போர்டு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். ஆக ராஜ்குமார் என்ற பெயரில் 5 பேரும், ராமச்சந்திரன் என்ற பெயரில் 3 பேரும் போட்டியிட உள்ளனர். இந்த பெயர்கள் வாக்காளர்களை குழப்பும் வாய்ப்பு உள்ளதால், சின்னத்தை பார்த்து வாக்களிக்க வேண்டும் என திமுக, அதிமுகவினர் பிரசாரத்தின்போது வலியுறுத்தி வருகின்றனர். பாஜவினர்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ராஜ்குமார் என்ற பெயரில் போட்டியிடும் நபர் ஒருவர் பாஜ வேட்பாளர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருக்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.