கோவை பாலம் 1 வாரத்துக்கு இரவு நேரங்களில் மூடப்படும்..!
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
கோவைக்கு புது வரவாக அமைந்துள்ள இந்த மேம்பாலத்தில் வாகனஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள் இரவு நேரங்களில் சென்று புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்க விரும்புகின்றனர்.
இதனால் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேம்பாலம் தடுப்புகள் கொண்டு காவல் துறையால் மூடப்பட்டது. இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பு காரணத்திற்காக 1 வார காலம் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரியவருகிறது.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை தமிழக முதல்வர் இந்த மேம்பாலத்திற்கு சூட்டினார்.
கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என மொத்தம் 4 இடங்களில் இறங்கு தளம் மற்றும் அண்ணா சிலை தவிர மற்ற 3 இடங்களில் ஏறுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாலம் புதிய தொழில் நுட்பங்களுடன் சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள் (Expansion joint), சிறந்த பயண வசதி, ஒலி குறைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் ஓடு தளத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு – நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் முன்னோடி முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், உயர்மட்ட மேம்பாலத்தின் சென்டர் மீடியன் பகுதியில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் (Drip Irrigation), தரைமட்டத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் (Sprinkler Irrigation) ஆகியவை அமைக்கப்பட்டதன் மூலம் நகரின் அழகும் ஆரோக்கிய சூழலும் மேம்படும். மேலும், மின்சார சேமிப்பு விளக்குகள் (Solar) மாசு கட்டுப்பாட்டையும், அதிக பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அத்துடன் பாதுகாப்புச் சுவர்கள், ரோலர் தடுப்பு (Roller Crash Barrier) கருவிகள் போன்ற உலகத் தரமான பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இப்புதிய உயர்மட்ட மேம்பாலம் மூலம், கோயம்புத்தூர் நகரில் இருந்து விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைவதோடு, பெருவாரியான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், அவசர சேவை பயனாளிகள், முதலீட்டாளர்கள் ஆகியோர் பயன்பெறுவர்.


