இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவிப்பு..!
தமிழ்நாடு சிஜேபியை சேர்ந்த பாரதி, தினேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "பல நாட்களாக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தனி நபர் தாக்குதல் எங்கள் நோக்கம் அல்ல. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இதேபோல், நீட் தேர்வு விலக்கப்பட வேண்டும். இதுவே எங்களின் நோக்கம்.
அறவழியில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இன்று ஐந்தாவது நாளாக இங்கு நாங்கள் கூடி உள்ளோம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மாணவர்களும், இளைஞர்களும் பெரும் அளவில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆட்சியின்போது அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. அவர், மத்திய கல்வி அமைச்சரை இந்த விவகாரத்தில் ஒரு குற்றவாளியாக கருதி குறைந்தபட்ச தண்டனையாக அவரை அப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இங்கு எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல், ஒற்றுமையாக ஜனநாயக முறையில் போராடி வருகிறோம். தமிழ்நாடு அரசு எங்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். காவல்துறையும் கண்ணியமாக செயல்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
இதேபோல், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு பறக்கணிப்பு போராட்டத்தில் களமிறங்கியிருப்பது மாநிலம் முழுவதும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

