உணவக சட்னியில் கரப்பான் பூச்சி- சேலத்தில் அதிர்ச்சி

 
கரப்பான் பூச்சி

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள  தனியார் உணவகத்தில் வாங்கிய   சட்னியில் கரப்பான் பூச்சி இருந்ததாக  எழுந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். 

சேலம் செவ்வாப்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர்.  வெள்ளி பட்டறை   தொழிலாளியான இவர்,  இன்று காலை தனது குழந்தைகளுக்காக  சேலம் மாநகர் ,  செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள குப்தா ஸ்வீட்ஸ் உணவகத்தில் காலை சிற்றுண்டி பார்சல்  வாங்கி சென்றுள்ளார்.  இதில் சட்டினி பாக்கெட்டில்  கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதைக் கண்டு குழந்தைகள்  அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தந்தை சங்கரிடம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சங்கர், உணவாக மேலாளரிடம், சட்னியில் கரப்பான் பூச்சி இறந்த கிடந்தது குறித்து முறையிட்ட போது , முறையான பதில் கூறாததால்,  வெள்ளித் தொழிலாளி சங்கர்,  உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதறையடுத்து   உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் , சேலம் குப்தா ஸ்வீட்ஸ் உணவகத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறதா?  என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சட்னியை பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உணவு பாதுகாப்பு  துறையினரின்  அதிரடி சோதனையால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.