நடிகர், நடிகைகளுக்கு கொக்கைன் சேல்ஸ்! பொட்டலங்களுடன் சிக்கிய நைஜீரியர்கள்
சென்னையில் கொக்கைன் போதை பொருளை விற்பனை செய்த இரண்டு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 1.250 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை ஈடுபட்டனர். இதையடுத்து, தாம்பரத்தை அடுத்து மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ஒரு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்த போலீஸார் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்து நடத்திய விசாரணையில், பள்ளிக்கரணையில் கொக்கைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த மற்றொரு நைஜீரிய வாலிபரை கைது செய்த தனிப்படை போலீஸார், 250 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இருவரும் அமைந்தக்கரை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு நடத்திய விசாரணையில், இருவரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த Chinedu onochie(48), Amehzion inalegwu(39) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் பெங்களூரில் இருந்து கொக்கைன் போதைப் பொருளை சென்னைக்கு கடத்தி வந்து, பல்வேறு இடங்களில் கிராம் கணக்கில் சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதனை அடுத்து அமைந்தகரை போலீஸார் பறிமுதல் செய்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1.250 கிலோ கொக்கைன் போதைப்பொருளையும் மற்றும் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.