2 தவெக எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்..!!
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பாக, கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "வெற்றிகரமாக ஆறு மாத காலப் பணியை நாம் நிறைவு செய்துள்ளோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்; மற்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டுமே நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்" என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் மேலும் பேசுகையில், "அரசியலில் நமக்கு எதிரான கட்சிகளை அதிகம். எதிர்கட்சிகள் நமக்கு எதிராக பேசுவதை பார்த்து, தொய்வடையாமல் வேலையை பாருங்கள். தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்களுக்கு நமது எம்எல்ஏக்கள் யாரும் இடம் தந்து விடக்கூடாது.
சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். என்னை சந்திக்க யாரேனும் தடுக்கிறார்களா? என்று கூறுங்கள். நாம் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துங்கள்.
நமது ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், பல்வேறு தவறான, அவதூறு செய்திகளை பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எந்த பொறியிலும் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளேன்" என்று தெரிவித்தார்.
கூட்டம் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தவெக தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, கடந்த ஆறு மாதங்களில் அவரவர் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், தொகுதி மற்றும் கட்சியில் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது இடர்பாடுகள் உள்ளதா என்பது குறித்தும் விஜய் விவரமாகக் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.
கடைசியாக சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் ஆகியோரை முதலமைச்சர் விஜய் தனித்தனியே சந்தித்து 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் புகாரியில் சிக்கிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மனு கொடுக்க வந்தவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சிக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரை முதல்வர் விஜய் கண்டித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

