கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி.. இ-வாடகை செயலி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்..

 
முதலமைச்சர் ஸ்டாலின்

கரும்பு விவசாயிகளுக்கு  ரூ. 150.89 கோடி ஊக்கத் தொகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வேளாண் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.


தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்ககளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு  பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை தொடக்கி வைத்தார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அப்படி அரசு சார்பில்  வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதேபோல், கன்னியாகுமரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி,தென்காசி,பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை கட்டடங்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகக்கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.  மேலும், 2020-21 ஆண்டில் அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய   91,120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 150.89 கோடி வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக  5 விவசாயிகளுக்கு ஊக்கத்திகையினை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதோடு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,  16 லட்சம் ஏக்கரில் நெல் தரிசு நிலத்தில் உளுந்து மற்றும் பச்சைபயிறு சாகுபடியை  ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி அந்தத் திட்டத்தினையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.