பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

 
திருமண நிதியுதவி திட்டம் -ஸ்டாலின்

திருமண உதவித் திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ அரசின் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.  அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப்பணமும்  வழங்கப்படுகிறது.

திருமணம்

திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் மணப்பெண்ணின்  பெற்றோர் இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றை  வைத்து முதலில்  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டும்.  திருமணம் முடிந்த பிறகு திருமண பதிவுச் சான்றிதழையும்  அதனுடன் இணைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.. இந்த திட்டத்தின் ஆண்டு தோறும் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தாலிக்கு தங்கம்

அந்தவகையில் இந்த ஆண்டு ( 2021 - 2022 ) திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 762 கோடியே 23 லட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்த 53,599 பெண்களும், பட்டம் பெறாதா 41,101 பெண்களும் என மொத்தம் 94,700 பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்பட இருக்கிறது.

இதில் முதல்கட்டமாக  சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, (13.01.22)  அன்று , சென்னை மணடலத்தைச் சேர்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடையாளமாக 5 பயனாளிகளுக்கு  அவர் 8 கிராம் தங்கமும், நிதியுதவியும் அளித்தார்.