"வீர் சக்ரா" பழனியின் தீரம்; தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

 
ஸ்டாலின்

கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் கடும் மோதல் நிலவியது. இதில் 20 
இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடு அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. ஸ்டாலின்

இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் நேற்று ராணுவ வீரர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். தமிழ்நாட்டு வீரர் பழனியின் சார்பில் அவரது மனைவி வானதி தேவி வீர் சக்ரா விருதைப் பெற்றுக்கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பழனியின் மகன், தன் தந்தையைப் போலவே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபடுவேன் என சொன்னது அனைவரையும் உருக வைத்தது.

Image

தற்போது பழனியின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், “வரலாற்றில் நிறைந்து வாழும் ராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது. கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளார்.