“சிஎம் சார்... சீப்-ஆக நடந்துக்காதீங்க!” தாராபுரத்தில் முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்..!

 
1

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "அமராவதி ஆற்றின் அழகும் வரலாற்று சிறப்பும் கொண்ட தாராபுரம் மக்களுக்கு அன்பான வணக்கம். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை. அந்த தஞ்சைக்கு விதை நெல்லை சப்ளை செய்வது தாராபுரம். தென்னை மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஊர். உழைப்பையும் உண்மையும் மதிக்கும் உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை, நியாயம் கேட்டு வந்துள்ளேன்.

ஒருவரிடம் பெட்டி பெட்டியாக பணத்தை திணித்ததால் உங்கள் மீது இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. பெட்டியை கொடுத்தது யார்? பெட்டியை வாங்கியது யார்? என்று உங்களுக்கே தெரியும். இன்னொன்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‌ உங்கள் வரிப்பணத்தில் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாதம் முன் நீங்கள் அளித்த ஓட்டு செல்லாதது என மாற்றிய துரோகிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். துரோகத்தை முறியடிப்பது மட்டுமல்ல உங்களுக்கு விஸ்வாசமானவருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு வந்துள்ளேன்.

சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அவரை மக்கள் இப்போது பெட்டி பாமா என்று அழைக்கிறார்கள் இன்னொரு பெயர் உள்ளது. பல்டி பாமா எப்படி அந்த உருவத்தை வைத்து பல்டி அடித்தார் என தெரியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் தான் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அப்படி வந்த தேர்தல் இது அல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் ஜனநாயகத்தை சாகடித்து விட்டதால் இந்த தேர்தல் வந்துள்ளது.

ஆட்டம் காணும் ஆட்சிக்கு துணை போக உங்கள் வாக்கு களை விற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது. வாக்களித்த உங்கள் மீது துளி கூட மரியாதை இல்லாமல் வாக்களித்த மை அழியும் முன்பு வேறு கட்சிக்கு ஓடிப்போன அவர்களின் செயல் தான் காரணம். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை கூட வெல்ல முடியாத மக்கள் ஆதரவு இல்லாத நபர் முதல்வராக உள்ளார். தன்னுடைய சுயலாபத்துக்காக மக்கள் தீர்ப்பை விலைக்கு வாங்க வரவைத்து தேர்தல் இது.

தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையை கொச்சை படுத்தும் இவர்களுக்கு தாராபுரத்தில் நீங்கள் கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் இதே வேலையாக இறங்கி விடுவார்கள், இப்போதே தமிழ்நாடு முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அமைச்சர்கள் எந்த வேலையும் பார்க்கமல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளனர். அரசாங்கம் செயல்படவில்லை ‌ இதெல்லாம் தெரிந்ததால் தான் மக்கள் அவரை விரட்டி வருகின்றனர். பல ஊர்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நுழைய கூட முடியவில்லை. ஆளும் கட்சி வேட்பாளருக்கான எதிர்ப்பு மட்டும் இல்லை போலி பிம்பத்தை காட்டி ஏமாற்றும் விஜய்க்கான எதிர்ப்பு. ஆட்சியின் முதல் 6 மாதம் தேனிலவு காலம் என்பார்கள். ஆனால் 4 மாதத்தில் நாறிப்போச்சு. இந்த ஆட்சி. தவெகவுக்கு வாக்களிக்காத மக்கள் மட்டுமல்ல வாக்களித்த மக்களும் இப்போது நாள்தோறும் புலம்பி வருகின்றனர்.

பிரச்சார மேடையில் மைக் கிடைத்தால் மனப்பாடம் செய்ததை கத்துகிறார். சட்டமன்றமாக இருந்தாலும் சரி, தெருவாக இருந்தாலும் சரி கத்துகிறார். ஆனால் மீடியா மைக் பார்த்தால் மட்டும் அலர்ஜி. இவரிடம் மேட்டூரில் கண்ணாடி வாங்கியவர், காலை உணவு பரிமாறிய சிறுமி கூட பேட்டி தருகிறார்கள். ஆனால் ரீல்ஸ் சிஎம் மீடியா என்றால் பயப்படுகிறார். என்னை பார்த்து வாயை திறக்க ஸ்டாலின் சார் என கத்துகிறார். நானும் கத்துகிறேன். சிஎம் சார். ப்ரோ, சிஎம் சார் நான் எல்லா வற்றிற்கும் பேசித்தான் வருகிறேன். தலைமை தேர்தல் ஆணைய விஷயத்தில் ஏன் பேச மறுக்கிறீர்கள், இந்தியா முழுவதும் பேசும் விஷயத்தில் வாய் திறக்க முடியவில்லை. பிஜேபி என்றால் பயமா சிஎம் சார். தாராபுரம் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவரே ஒரு உண்மை ஒப்புக்கொண்டார்
தவெக, பாஜகவின் கிளை தான் என் அவரே ஒத்துக் கொண்டார். அந்த உண்மையை சொன்னதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சட்டமன்றத்தின் மாண்பை இந்த முதலமைச்சர் குலைத்து விட்டார். கண்ட கண்ட சைகை செய்து நான் மிசா சிறை வாசத்தில் பட்ட கொடுமைகளை கிண்டல் செய்யும் களமாக சட்டமன்றத்தை மாற்றி விட்டார். சிஎம் சார், சீப் மினிஸ்டராக நடந்து கொள்ளுங்கள், சீப் மினிஸ்டராக அல்ல. தவெக அரசியல் கட்சி அல்ல, கார்ப்பரேட் மாபியா. அவர்கள் தமிழ்நாட்டை அம்பேல் ஆக்க வேண்டும் என்பதே அவர்கள் டார்கெட்.

தப்பித்தவறி ஆளும் கட்சி வெற்றி பெற்றால் மின் கட்டணம் உயரும். பால் விலை உயரும். இந்த தேர்தலில் அடி கொடுத்தால் தான் எம்.எல்.ஏ ஷாப்பிங் முடிந்து தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவார்கள். துரோகம் தான் மாவீரன் தீரன் சின்னமலையை தோற்கடித்தது. அதே போல் துரோகம் தான் தாராபுரத்தில் இடைத்தேர்தலை திணித்து உள்ளது. ‌ அந்த ஆணவ அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்ட உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.