“மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்”- மு.க.ஸ்டாலின்

 
mks mks

கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல, வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin

மூளையில் ரத்த நாளச் சிதைவால் பார்வைத் திறன் குறைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த மருத்துவ மாணவிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர் அரசு மருத்துவர்கள். இதுதொடர்பான செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு! நம் #DravidianModel-இன் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை, பல கோடி மக்கள் பயனடையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம். இந்த வகையில், நாம் உருவாக்கிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது.


சிறிய நகரங்களிலும்கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது! அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை - எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும் - மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது. மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.