நாளை முதல் 2 நாட்களுக்கு ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19, 20-ம் தேதிகளில் இரு தினங்கள் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட பணிகளை்தொடங்கி வைக்கிறார்.

இதற்காக நாளை மதியம் ஈரோடு வரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையில் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 20-ம் தேதி காலை, ஈரோடு சோலாரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா முடிவற்ற திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு, சோலார் பேருந்து நிலைய வளாகத்தில், 18.48 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை மொத்த விற்பனை வணிக வளாக கட்டுமான பணி, அரச்சலுார் அருகே ஜெயராமபுரத்தில், 4.90 கோடி ரூபாயில் பொல்லான் சிலையுடன் அரங்கம், 141.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் சென்னிமலை ஒன்றியத்தில், 22 கிராம ஊராட்சிகளில், 434 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம், 482 கோடி ரூபாயிலும், ஈரோடு சூரம்பட்டி, 4 ரோட்டில், 16 கோடி ரூபாயில், 6 தளங்களுடன் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, 4 தளங்களில் வணிக வளாக கட்டடம், பவானிசாகரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், 33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், 104.01 கோடி ரூபாயில் கோபி, சத்தி, பவானியில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், 59.60 கோடி ரூபாயில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு வெளி வட்ட சுற்றுச்சாலை உட்பட, 952.35 கோடி ரூபாய் மதிப்பில், 560 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்தும், துவக்கியும் வைக்கிறார். பின், பல்வேறு துறைகள் சார்பில், 8 மாவட்டங்களை சேர்ந்த, 50,088 பயனாளிகளுக்கு, 284 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். விழா பந்தலில், 20,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளனர். முதலமைச்சர் வருகையையொட்டி, 8 மாவட்டங்களை சேர்ந்த 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்..

