மகளிர் உரிமை தொகை திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
mk stalin

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.  

குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில்  சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாதம்தோறும் உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு என தனித்தனியாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.  இதற்காக ரூபே கார்டாக பிரத்யேகமாக மகளிர் புகைப்படத்தை அச்சிட்டு ஏடிஎம் கார்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இதன் மூலம் உரிமைத்தொகையை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும்.

மகளிர் உரிமைத்தொகை - விண்ணப்பப் படிவம் வெளியீடு

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். திட்டம் தொடங்கப்படும் இன்றைய தினம் ஒருகோடி பேருக்கும், ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பதால், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ,1,000 பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தும்பணி நேற்றே தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது.