3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 
stalin

கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்றும் 5 பேர் உயிரிழந்தனர்  கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் மற்றும் இருவர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.