அய்யன் வள்ளுவன் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

 
stalin

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

tn

உலகப் பொதுமறை ,பொய்யாமொழி ,தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1970 ஆம் ஆண்டு முதல் தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் திருநாள் எனவும் அதனை விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு தைத்திங்கள் இரண்டாம் நாளான அய்யன் திருவள்ளுவர் திருநாள் அன்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.திருக்குறளின் சிறப்பினை மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளும் வகையில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களை பாராட்டி  பரிசுத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது . 

tn

அந்த வகையில்  அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இன்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன் குறலோவியம் என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறட்பாக்களில் செம்மார்ந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் முதல் 3 பரிசு பெற்றவர்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் பரிசு தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.