"வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,  உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் தேதி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் , 15 கோடி ரூபாய்  மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் ஆகியவை வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்தது. அத்துடன் இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது என்பதால், ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தது. இதுதொடர்பாக பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். 

stalin

இந்த சூழலில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைக்கு  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய பதில் கடிதத்தில்,  இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால்  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் . நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும்,   அதை வினியோகம் செய்வதற்கும்  மத்திய அரசுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று தெரிவித்தார். 


இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவ, தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி . இந்த மனிதாபிமான செய்கை  அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படுவதுடன், நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.