நீங்கள் நலமா திட்டத்தின் படி பயனாளியிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீங்கள் நலமா திட்டத்தின் படி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளியிடம் காணொளி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமாக "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டத்தை 06.03.2024 அன்று தொடங்கிவைத்து, பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக இன்றைதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டம். கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.ராதிகா க/பெ.மணிகண்டன் என்ற பயனாளியிடம் காணொளிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், இம்மாதத்திற்கான உரிமைத் தொகை கிடைப்பெற்றதா என்பது குறித்தும், உரிமைத் தொகை வங்கி கணக்குகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இத்தொகை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். இதேபோன்று மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் உதவியாக இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். 


இந்த உரையாடலில் கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ராதிகா என்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதாகவும். இந்த மாதத்திற்கான தொகை தனது வங்கி கணக்கில் வாயிலாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிர் பயணத்தின் மூலம்தான் தாங்கள் அதிக பயணங்கள் மேற்கொள்வதாகவும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் உரிமைத் தொகையினை தனது மகனின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்ததுடன். தனது 7 வயது மகன் மதன்ராஜ் என்பவருக்கு இரத்தப்புற்று நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், சிகிச்சைக்கு போதிய பணமில்லாததால் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாங்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அவரிடம் உங்கள் கோரிக்கையினை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கேற்ப உடனடி நடவடிக்கையாக அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருத்துவக்குழு அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று சிறுவன் மதன்ராஜ்க்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், திருமதி.ராதிகா என்பவரிடம், அவரது மகன் மதன்ராஜ் மருத்துவ சிகிச்சைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். 

அவரது மருத்துவ தொடர் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் சுகாதாரத் துறை வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதன்ராஜ் என்பவரின் தாயார் திருமதி.ராதிகா அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வருவதால் மகனின் அன்றாட மருத்துவ செலவிற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், தனக்கு தையல் பயிற்சி நன்றாக தெரியும் என்றும், இலவச தையல் இயந்திரம் வழங்கினால் அது தனது மகனின் மருத்துவ தேவைகளுக்கு நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் அவரது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பிற்பட்டோர் நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.