"எதுக்குமே நிதி கொடுக்காமல் வாயாலேயே வடை சுடுகிறார் நிர்மலா சீதாராமன்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
Stalin

NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை,  ஆரணி மக்களவைத் தொகுதி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பரப்புரையாற்றினார்.

stalin

அப்போது பேசிய அவர்,  "அடுத்தடுத்து கடந்த ஆண்டு இரண்டு இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்தோம்.  எட்டு மாதம் மாவட்டங்கள் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டன . பாதிப்புகளை சீர் செய்யவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் 37,000 கோடி ரூபாய் வேண்டும் என்று நாம் கேட்டோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை.  கேட்ட நிதியையும் அவர் தரவில்லை.  ஆனால் என்ன சொன்னார் தெரியுமா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன்.  அவர் வந்து பார்வையிட்டு நிதியை ஒதுக்குவார் என்று என்னிடம் கூறினார்.  சொன்னபடி நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார்; நிதி வரவில்லை.  நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார் சும்மா நீங்க கேட்கும்போதெல்லாம் தர முடியாது என்று நக்கலாக பதில் சொன்னார்.  அவரின் பேச்சுகளை பார்த்த போது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அம்மையார் நிர்மலா சீதாராமன் எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால்,  இது போன்ற நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதை பிச்சை என்று கொச்சைப்படுத்தினார்.

nirmala

ஐந்தாயிரம் கோடியை கொடுத்து விட்டோம். அதற்கு கணக்கு கொடுங்கள் என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போல்  பேசியிருக்கிறார்.  அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.  ஏனென்றால் அது வெளிநாட்டு வங்கிகள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த கடன். அந்த கடனையும் தமிழ்நாடு அரசு தான் திரும்ப கட்டப் போகிறது. மக்களுக்கு புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன். 

மாநில அரசு வாங்கிய கடன் எப்படி மத்திய அரசின் நிதி ஆகும்.  அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாக சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள். அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே ஊரை ஏமாற்ற திருக்குறள் சொல்லாமல் உளமாற ஒரு திருக்குறளை படியுங்கள்.  ஓட்டு கணக்கு போட்டு பொய்களை அள்ளி வீசினால்,  மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கணக்கப் போடாதீர்கள்.  நாள் கணக்கில் தான் உங்கள் ஆட்சி இருக்கிறது.  ஆணவத்தில் தப்பு கணக்கு போடாதீர்கள். நான் மறுபடியும் தெளிவாக சொல்கிறேன்.  நான் கேட்கும் நிதி தேசிய பேரிடர் நிதியிலிருந்து 37,000 கோடி ரூபாயை தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். கொடுத்ததாக சொல்வது பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும்,  நமக்கு கண்டிப்பாக வரவேண்டிய மாநில பேரிடர் நிதி.  கரகாட்டக்காரன் படத்தில் வருமே வாழைப்பழ காமெடி அது போன்று அதுதான் இது இதுதான்  அது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

stalin

நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது? 5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே...நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா? NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்? எதுக்குமே நிதி கொடுக்காமல் வாயாலேயே வடை சுடுகிறார் நிர்மலா சீதாராமன்"  என்றார்.