"பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
stalin

காலை உணவும் வழங்கிவிட்டோம், இனி மாணவர்கள் கவலையின்றி படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் , ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக தமிழகம்  முழுவதும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முதல்வர் மு .க .ஸ்டாலின் இன்று மதுரையில் நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதன்மூலம் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ttn

மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறிய முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி உண்டார் . அத்துடன் அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார் . இத்திட்டத்தை ரூ. 33.56 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் 95 மாணவர்களுக்கு இது திட்ட மூலம் உணவு வழங்கப்பட உள்ளது.

tn

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின்,  என் வாழ்வின் பொன்னான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.   ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளின் ஆதிமூலத்தை கண்டறிவதற்காக இந்த ஆதிமூலம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.சென்னையில் ஆய்வின் போது மாணவர்களை சந்தித்து கேட்டபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு காலையில் பள்ளிக்கு வருவதை உணர்ந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டிகளாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணை வடிவமான திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம். பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று நான் எண்ணியதால் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன். இத்திட்டத்தை சலுகை, இலவசம் என எண்ணக்கூடாது . இது அரசின் கடமை.  பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள்.  இதனால் கல்வி மேம்படும். இதற்கான நிதியை செலவாக நினைக்கவில்லை.  இத்திட்டத்தை ஆட்சியின் முகமாக பார்க்கிறேன். கலைஞரின் மகனின் அரசு கருணையின் வடிவான அரசு.  தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும்.  ஆசிரியர்கள் , பணியாளர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்குங்கள். 

tn

 கல்வி போராடிப் பெற்ற உரிமை . கல்வி உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து என்று உணர்ந்து  நன்கு படிக்க வேண்டும் . நன்கு படியுங்கள்.  படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள்.  நீங்கள் படியுங்கள் நான் இருக்கிறேன். பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்  என்றார்.