மத்திய அரசின் நெருக்கடியை மீறி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் - முதலமைச்சர் பேச்சு

 
stalin

மருத்துவமனையை தேடி மக்கள் செல்வதை தாண்டி, மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52 இடங்களிலும் , கடலூரில் 49 இடங்களிலும் , கோவையில் 42 இடங்களிலும் , தஞ்சையில் 40 இடங்களிலும் உள்ளிட்ட 1000 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.  சந்தை விலையை விட இங்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வர் மருந்தகங்களில் தனியார் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை 75% தள்ளுபடியில் வாங்கலாம். மருத்துவமனையை தேடி மக்கள் செல்வதை தாண்டி, மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நெருக்கடியை மீறி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான கடமையாக திட்டங்களை செயல்படுத்துகிறோம்
மக்களுக்கு நன்மை செய்வதில் திராவிட மாடல் அரசு கணக்கு பார்ப்பதில்லை. நாம் சிறந்து விளங்குவதாக நாமே சொல்லிக்கொள்ளவில்லை; மத்திய அரசுதான் சொல்கிறது. மருந்தகம் அமைக்க தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். பி.பார்ம் படித்த 1,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.