கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாட்டிற்கு நிரந்தர தீர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்.
கச்சத்தீவை, மாநில அரசுதான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி. ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என ஜெயலலிதாவும் தீர்மானம் நிறைவேற்றினார். கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாட்டிற்கு நிரந்தர தீர்வு. பாஜக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்காதது வேதனையாக உள்ளது. இலங்கை செல்லும் பிரதமர் மோடி, நிரந்தர தீர்வு காண வேண்டும். தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும். கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு என கூறினார்.