பெண்கள் பாதுகாப்புக்கு குற்றவியல் சட்டத்தில் திருத்தம் - முழு விவரம் இதோ!

 
mk stalin

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செல்பவர்களுக்கு தண்டனை அதிரிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த மசோதாவின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது. மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறை மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குகிறது தமிழக அரசு.
பெண்களுக்கு துன்புறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
 
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை விதிக்கப்படும் கடுங்காவல் தண்டனை, 14 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊழியரோ, அவரது நெருங்கிய உறவினரோ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். பெண்ணை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையில் இருந்து மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
பெண்ணின் ஆடையை அகற்றும் உள்நோக்கத்துடன் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். காவல் அலுவலர், அரசு ஊழியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.