அந்த சார் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? என கேட்கிறார்கள், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி அந்தப் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. யார் அந்த சார் என கேட்கிறார்கள், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்; சிறப்பு நீதிமன்றம் மூலம் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் அந்த சார்? எனக் கேட்கிறீர்கள். உண்மையாகவே எதிர்க்கட்சியிடம் ஆதாரம் இருந்தால் புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். அதை விடுத்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என கூறினார்.