மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கம் - முதலமைச்சர் பேச்சு
கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என ஊழல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய காலணி ஆலை மூலம் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தபின் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இயங்கி வருகிறது. எதிர்கால தமிழ்நாடு வளமான தமிழ்நாடாக இருக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என ஊழல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. வரலாற்றில் அழிக்க முடியாத ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும். பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகாது. அது பளிச்சென்று அம்பலப்பட்டு போகும். திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை இபிஎஸ் அவிழ்த்து விடுகிறார். மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு இபிஎஸ்க்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.