பெண் காவலர்களின் வீர தீர செயல்கள் ஆண்களின் பார்வையை மாற்றிவிட்டது - முதலமைச்சர் பேச்சு

 
MK Stalin

ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் என  பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 
 
தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டிஜிபி, காவல் அதிகாரிகள்,அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் அவள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  இதேபோல் பெண் போலீசை பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பணியிட மாறுதல், துப்பாக்கி சுடும்போட்டி, பெண் காவலர்கள் அணிவகுப்பு மாற்றிவைப்பு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

mk stalin

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: மகளிர் தின உரையில் பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று பெண் காவலர்கள் நிகழ்த்திக் காட்டிய வீர செயல்கள், இங்குள்ள அனைத்து ஆண்களின் பார்வையையும் மாற்றிவிட்டது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முதலாக பெண்களும் காவலர்கள் ஆகலாம் என்பதை உருவாக்கி காக்கி உடை அணிய வைத்து, பெண்கள் கையில் துப்பாக்கியும் ஏந்த வைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது தொலைநோக்கு திட்டத்தால் இன்று 34 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். முதலமைச்சர் என்ற முறையில் எனக்கான பாதுகாவலர் படையிலும் பெண் காவலர்கள் உள்ளனர். ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். பொன்விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.