10 முக்கிய கோரிக்கைகள்...! எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

 
cm mk stalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.4.2025) சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கிய கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பரிந்துரைப் பட்டியல் அளித்து நிறைவேற்றப்படும் திட்டம் குறித்து மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் கேள்விக்கு பதிலளித்து உரையாற்றினார். 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றிடும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இங்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இத்திட்டத்தில் மாற்றுப்பணியை தந்தாலும் அதுவும் சாத்தியமில்லை என்று தெரிய வருகிறது என்று சொல்லியிருக்கிறார். அது உண்மை தான், அதை நான் மறுக்கவில்லை. இந்த திட்டத்தை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முதலமைச்சராகிய நானே அதை தலைமை தாங்கி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். எனவே கட்சிப் பாகுபாடின்றி, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள், இந்த திட்டத்தில் நிறைவேற்றி தருவதற்கான பணிகள் குறித்த பட்டியல் எதுவும் தரவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டு அதற்குப்பிறகு தான் அவர் தந்தார். 

சாத்தியமில்லாத திட்டம் வரும்போது நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற பதில் வருகிறது. எனவே நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக்கூடிய திட்டங்கள் தான் நிறைவேற்ற முடியும். அந்தப் பணிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். பள்ளிக்கூடத்திற்கான கட்டடங்கள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொன்னார். இது அந்த துறையின் சார்பில் நிறைவேற்றப்படுகிறது. எனவே, எந்த கட்சி பாகுபாடின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை மீண்டும் இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.