அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
அம்பேத்கர் குறித்தான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட புன்னியம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!#BabasahebAmbedkar
இந்த நிலையில், அம்பேத்கர் குறித்தான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.