நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் இதற்கு முன்பு நகராட்சியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் குறுகலான சாலையில் இருப்பதால், போக்குவரத்து சிரமம் இருந்து வந்தது. அதைப் போக்கும் விதமாக புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட ரூ.11.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இந்த மாநகராட்சி அலுவலகம் 2 தளங்களுடன் பிரம்மிக்கும் வகையில்  கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் இந்த மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அதில் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலுக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை   திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மனோஜ் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.