"மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்" - பேராசிரியர் சுப. திண்ணப்பன் பாராட்டு

 
tn

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  இன்று (25.05.2023) சிங்கப்பூர் வாழ் தமிழர், தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் ஆவார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழு, பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும், கல்வி அமைச்சகத்தின் குழுக்களிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் ஆற்றிய தமிழ்ச்சேவைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் காலஞ்சென்ற பெருமதிப்பபிற்குரிய திரு. எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்த 88 வயதான முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களுக்கு, அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சரை  சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் சுப.திண்ணப்பன், நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தான் வந்தது. திருவாரூரில் நான் படித்துக் கொண் இருந்த போது தான் முதன்முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சைக் கேட்டேன். அப்போது தான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது, தமிழ் ஆசிரியராக வேண்டும், தமிழ் பேராசிரியராக வேண்டும் என்ற வேட்கை வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, பெண்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோல மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி வருவது ஆகியவை பாராட்டுக்குரியவை. கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை தனது முழு மூச்சாக கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இப்போது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள்ளார். நேற்று சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை பாராட்டியதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.