உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!!

 
m.k.stalin

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருப்பது, மாணவர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

stalin

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள், தங்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு அவ்வாறு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்று அனுமதிக்க தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் வழி இல்லைஎன்றும், அவ்வாறு தளர்வு அளித்தால், இந்திய மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், உக்ரைனில் தங்கள்படிப்பை முடிக்காத மாணவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பரிமாறிக் கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்தியாவில் இளநிலைப் படிப்புகளை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் பின்வாசல் வழியாக, அவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. வெளியுறவு விவகாரங்களுக்கான மக்களவைக் குழுவானது, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்தியக் கல்லூரிகளில் சேர்க்க பரிந்துரைஅளித்தது.

Modi - NITI Aayog

இதை அறிந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். தற்போது மத்திய அரசு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது. இந்தநிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது சிக்கலாகஇருந்தால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி, சேர்க்கலாம்.இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாததால்தான், அவர்கள் உக்ரைனில் மருத்துவப் படிப்பை நாடியுள்ளனர். எனவே,சிறப்பு நிகழ்வாகக் கருதி, வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்துக்கு இணையான கட்டணத்தை இங்கு உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயித்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதே கட்டணம் செலுத்தி தங்கள் கல்வியை தொடர ஏதுவாக இருக்கும். அதேசமயம், மாணவர்கள் பரிமாற்ற அடிப்படையில், வேறு நாடுகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை தேர்வு செய்து,இந்த மாணவர்களை சேர்க்க வெளியுறவு, சுகாதாரத் துறைகளை கேட்டுக் கொள்கிறேன்.மாணவர்கள் ஏற்கெனவே ஓராண்டுக் கல்வியை இழந்துவிட்ட நிலையில், பிரதமர் இதில் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.