ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இரண்டாவது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கையில் ரூ.376 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 45 பணிகளை தொடங்கி வைத்தார்.
காரைக்குடியில் பகுத்தறிவு கவிஞன் முடியரசனுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.