இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

 
stalin

வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் நடைபெற்ற விழாவில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.9.2023) பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேலூர் மாவட்டம், மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 நபர்கள் தங்கவைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.


முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என அறிவித்ததுடன், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் உதவி சுய இளைஞர்களுக்கு குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இத்திட்டங்கள் அனைத்தும் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவித்திருந்தார். அவற்றில் முதற்கட்டமாக, 3510 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக 20 மாவட்டங்களில் உள்ள 35 இலங்கைத் தமிழர் முகாம்களில் 3,510 புதிய வீடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. அவற்றில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேலூர் மாவட்டத்தில் நேரடியாகவும், இதர 12 மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாகவும் திறந்து வைத்தார். மேலும், மேல்மொணவூர், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் இல்லவாசிகளுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பத்தினருக்கு குடியிருப்புக்கான சாவிகளையும். 8 வகையான வீட்டு உபயோக பொருட்களையும், மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.