அயோத்திதாசப் பண்டிதருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு

 
tn tn

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

அயோத்தி தாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

tn

இந்நிலையில் அயோத்திதாச பண்டிதரின் 175ஆவது ஆண்டு விழாவின் நினைவாக,  சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் உருவச் சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.