குமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன்,விவேகானந்தா ஆகிய மூன்று சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக கடலின் நடுவே முக்கடல் சூழும் குமரியில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டு கண்ணாடி இழைப் பாலம் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.