எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) முக்கிய காரணமாகும். தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் எச்.பி.வி. தடுப்பூசியை நடைமுறைப்படுத்திய நாடுகளின் அனுபவம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முந்தைய நிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை காட்டியுள்ளது. மனித பாப்பிலோமா வைரசுக்கு தடுப்பூசி போடுவது, உலக சுகாதார நிறுவனத்தின் 2030-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்கும் கொள்கையின் அடித்தளமாக அமையும். எச்.பி.வி. தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் எச்.பி.வி தடுப்பூசி திட்டம் இலவசமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.


தடுப்பூசியின் நன்மைகள் குறித்து உணர்த்துவதற்காக எச்.பி.வி தடுப்பூசி பற்றிய தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் ஏற்கனவே
விழுப்புரம் நகரத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேர்காணல்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு டோஸ் HPV தடுப்பூசியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முதல் தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து 180 நாளன்று அடுத்த தடுப்பூசி போட வேண்டும். முதற்கட்டமாக. விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்றுநோய் நிறுவன பரிசோதனை மையத்தில் தகுதியான சுமார் 2,000 சிறுமிகளுக்கு முதல் டோஸ் HPV தடுப்பூசி போடப்படும். பின்னர், மாநில சுகாதாரத் துறை. தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், விழுப்புரம் நகரில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சாத்தியமான வகையில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். இதுபின்னர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள தகுதியுள்ள பெண் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் திரு. ஆர்.சேஷசாயி, செயல் துணைத் தலைவர் டாக்டர் E. ஹேமந்த் ராஜ், இயக்குநர் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.